மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:சிலைகளை கரைக்க விதிமுறைகளை வகுத்தது மாசு கட்டுப்பாடு வாரியம் + "||" + Vinayagar Chaturthi Celebration: Pollution Control Board Divided the rules

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:சிலைகளை கரைக்க விதிமுறைகளை வகுத்தது மாசு கட்டுப்பாடு வாரியம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:சிலைகளை கரைக்க விதிமுறைகளை வகுத்தது மாசு கட்டுப்பாடு வாரியம்
விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
சென்னை,

விநாயகர் சதுர்த்தி (நாளை) 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டிற்கு வாங்கி வந்தும் மக்கள் பூஜை செய்வார்கள். தெருக்கள், முக்கிய வீதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவார்கள். இதற்காக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சிறிய விநாயகர் முதல் பெரிய விநாயகர் வரை சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

சிற்ப கலைஞர்கள் தங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுத்து தங்கள் கை வண்ணத்தில் அனைவருக்கும் இஷ்ட தெய்வமான விநாயகரை பல விதமான வடிவமைப்பில் உருவாக்கி, அதனை விற்பனை சந்தைக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி விநாயகர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ஆண்டு வித்தியாசமான, கற்பனைக்கு எட்டாத விநாயகர் சிலைகளின் வடிவமைப்புகள் வந்துள்ளன. களிமண்ணால் மற்றும் எந்தவிதமான ரசாயனக்கலவை இல்லாமல் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு சந்தைக்கு வந்திருப்பது கூடுதல் சிறப்பை பெற்று இருக்கிறது.

வீடுகளிலும், தெருக்களிலும், முக்கிய வீதிகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து தங்கள் பூஜைகளை மக்கள் நிறைவு செய்வார்கள். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் கரைப்புக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது.

மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகள்

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்படி, களிமண்ணால் செய்யப்பட்டதும், எவ்வித ரசாயனக்கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கு, போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.