கதவை வெளிப்புறமாக பூட்டி வீட்டுக்கு தீவைப்பு: தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு
பெங்களூருவில், கதவை வெளிப்புறமாக பூட்டி வீட்டுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். இதில், தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
பெங்களூரு,
பெங்களூருவில், கதவை வெளிப்புறமாக பூட்டி வீட்டுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். இதில், தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வீடு தீப்பிடித்தது
பெங்களூரு கொரகுண்டேபளையாவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு பிரஜ்வெல் (6) என்ற மகனும், அங்கிதா (2) என்ற மகளும் இருந்தனர். மகேஷ் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, மகேசின் வீட்டுக்கு அவருடைய நண்பர் உமேஷ் வந்திருந்தார்.
இந்த நிலையில், அவர்கள் இரவில் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். அதிகாலையில் திடீரென்று வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த மகேசின் குடும்பத்தினர் வீட்டுக்கதவை திறந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கதவு திறக்கவில்லை.
சிறுவன் சாவு
அப்போது தான் கதவின் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருக்கலாம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதனால் அவர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கண்விழித்து ஓடிவந்து வீட்டு கதவை திறந்தனர். மகேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினரை மீட்டனர்.
இருப்பினும், ஜோதி, பிரஜ்வெல் ஆகியோர் தீக்காயம் அடைந்தார். அவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பிரஜ்வெல் பரிதாபமாக இறந்தான். ஜோதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எம்.சி. யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் திட்டமிட்டு கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. அதாவது, வீட்டை சுற்றி மண்எண்ணெயை தெளித்த மர்மநபர்கள் கதவை வெளிப்புறமாக பூட்டியதோடு, தாழ்ப்பாளை மின்வயரால் இறுக்கி கட்டி வைத்ததும் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும், மகேசின் உறவினர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story