விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது மும்பையில் 6,455 சிலைகள் நிறுவி வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மும்பையில் 6 ஆயிரத்து 455 சிலைகள் நிறுவப்படுகிறது. மண்டல்களில் வழிபட லட்சக்கணக்கான மக்கள் படையெடுக்கிறார்கள்.
மும்பை,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மும்பையில் 6 ஆயிரத்து 455 சிலைகள் நிறுவப்படுகிறது. மண்டல்களில் வழிபட லட்சக்கணக்கான மக்கள் படையெடுக்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலத்துடன் தொடங்குகிறது. ஆனந்த சதுர்த்தி தினமான 23-ந் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. அதாவது மண்டல்களில் நிறுவப்படும் விநாயகர் சிலைகளுக்கு 10 நாட்கள் சிறப்பு பூஜை செய்து, ஆனந்த சதுர்த்தி தினமான 11-வது நாளில் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.
பிரமாண்ட சிலைகள்
இதையொட்டி இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மாநிலம் முழுவதும் களைகட்டி உள்ளது. மும்பையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
மும்பை நகர வீதிகள் தோரணங்கள் மற்றும் மின்னொளி விளக்கு அலங்காரங்களில் ஜொலிக்கின்றன. முக்கிய வீதிகளில் நிறுவப்பட்டு உள்ள சர்வஜனிக் மண்டல்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் எழுந்தருள செய்யப்பட்டு இருக்கின்றன. சிற்ப கலைக்கூடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மண்டல்களில் சிவன், மகாவிஷ்ணு, கிருஷ்ணர், நரசிம்மர், சூரியன், முருகன் உள்ளிட்ட இந்து கடவுள்களின் அவதாரங்களை தாங்கி பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலிக்கிறார்.
பருப்பு, நூல்கண்டு, காகிதங்களால் உருவாக்கப்பட்ட வித்தியாசமான விநாயகர் சிலைகளும் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மண்டல்களும் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
6,455 சிலைகள் நிறுவப்படுகிறது
மும்பையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகர் சிலை கம்பீர தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை தங்கத்தில் ஜொலிக்கிறது.
மும்பையில் மண்டல்களில் 6 ஆயிரத்து 455 விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி பெறப்பட்டு உள்ளது.
விநாயகர் மண்டல்கள் அனைத்திலும் இ்ன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பக்தர்கள் அதிகளவில் மண்டல்களில் திரண்டு விநாயகர் சிலைகளை தரிசனம் செய்வார்கள்.
குறிப்பாக லால்பாக் விநாயகர், ஜி.எஸ்.பி., அந்தேரிக்கா ராஜா உள்ளிட்ட விநாயகர் மண்டல்களில் தரிசனம் செய்ய நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பார்கள். ‘கண்பதி பப்பா மோர்யா, மங்கள மூர்த்தி மோர்யா' பக்தி முழக்கம் விண்ணை பிளக்கும்.
வழிபாடு நடைபெறும் நாட்களில் மண்டல்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் திரளும். எனவே இந்த மண்டல்களுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கட்டுக்கடங்காமல் திரளும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அதிகளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த மண்டல்களில் காணிக்கைகள் குவியும்.
வீடுகளில் பூஜை
வீடுகளிலும் பொதுமக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார்கள். வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் எண்ணிக்கை மட்டும் லட்சத்தை தாண்டும்.
மும்பை, தானே, நவிமும்பையில் தமிழர்கள் சார்பில் ஆண்டுதோறும் தனித்தன்மையுடன் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் இந்த கொண்டாட்டம் அமைந்து இருக்கும்.
குறிப்பாக தாராவியில் இன்று மாட்டு வண்டியில் சப்பரம் தயார் செய்து விநாயகர் சிலைகள் நையாண்டி மேளதாளம் இசைக்க, கரகாட்ட கலைஞர்கள், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வதை காண முடியும்.
ஹோமங்கள் வளர்க்கப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்.
பூஜை ெபாருட்கள் வாங்க குவிந்தனர்
இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று மாட்டுங்கா, தாதர், செம்பூர், அந்தேரி, மலாடு, லால்பாக் மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
இவர்கள் பூஜைக்கு தேவையான மாலைகள், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள், விநாயகருக்கு பிடித்தமான மோதகம் உள்ளிட்ட பிரசாத பொருட்களை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story