கருணாநிதி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார்
கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழுப்புரம்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 7-ந் தேதி மரணமடைந்தார். அவருடைய இறப்பு செய்தியை கேட்ட அதிர்ச்சியிலும், துக்கம் தாங்காமலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் பலர் மாரடைப்பினாலும், விஷம் குடித்தும் இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. முன்னாள் வட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், தொண்டரணி வார்டு அமைப்பாளர் ராஜா, நெசவாளர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் ஜெயமூர்த்தி, உறுப்பினர்கள் கோபால், மனோகரன், மோகன், குமரவேல் ஆகிய 7 பேர் மாரடைப்பு ஏற்பட்டும், முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தசாமி விஷம் குடித்தும் இறந்தனர்.
நிவாரண உதவி
இவர்களது குடும்பத்தினருக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தலைமை கழகத்தின் சார்பில் தலா ரூ.2 லட்சத்தை நிவாரண உதவியாக நேற்று காலை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மு.க.ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, ரவிச்சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, பரத், வக்கீல் சுவைசுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story