வரத்து குறைந்ததால் கோவையில் காய்கறி விலை கடும் உயர்வு


வரத்து குறைந்ததால் கோவையில் காய்கறி விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 13 Sept 2018 4:30 AM IST (Updated: 13 Sept 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவு காரணமாக கோவையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந் துள்ளது.

கோவை, 

கோவை உக்கடத்தில் காய்கறி மார்க்கெட்க்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்தரிக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சரக்கு வேன்கள் மூலம் தக்காளி கொண்டுவரப்படுகின்றன.

இங்கு இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதுதவிர கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்து காய்கறி அனுப்பப்படு கிறது.

விலை உயர்வு

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள சாலைகள் பழுதடைந்தன. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக கோவையில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப முடியாத நிலை இருந்து வந்தது.

அப்போது காய்கறிகள் வரத்து அதிகரித்து இருந்ததால் தேக்கம் அடைந்து விலை குறைந்தது. தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதால் உக்கடம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தற்போது உக்கடம் மார்க்கெட்டுக்கு காய்கறிகவரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கேரட் கிலோ ரூ.60-க்கு விற்பனை

இதுகுறித்து உக்கடம் மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கணேசன் கூறியதாவது:-

கடந்த 10-ந் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் நடந்தது. இதனால் உக்கடம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. அப்போது இருந்து காய்கறிகளின் வரத்து தொடர்ந்து குறைந்ததாலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளதாலும் காய்கறி விலை உயர்ந்து உள்ளது.

கடந்த வாரம் சில்லறை விலையில் கிலோ ரூ.25-க்கு விற்பனையான கேரட் தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.25-க்கும், ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.20-க்கும், ரூ.10-க்கு விற்பனையான நாட்டு தக்காளி கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையும், ரூ.15-க்கு விற்ற ஆப்பிள் தக்காளி ரூ.25-க்கும், ரூ.15-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை களைகட்டியது

இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- (பழைய விலை அடைப்பு குறிக்குள்) புடலங்காய் ரூ.30 (ரூ.20), முட்டைக்கோஸ் ரூ.18 (ரூ.8), சுரைக்காய் ரூ.20 (ரூ.10), கத்தரிக்காய் ரூ.30 (ரூ.20), பாகற்காய் ரூ.35 (ரூ.25), முருங்கைக்காய் ரூ.35 (ரூ.20), பீட்ரூட் ரூ.40 (ரூ.20). உருளைக்கிழங்கு ரூ.40 (ரூ.25), பீன்ஸ் ரூ.40 (ரூ.15), அவரை ரூ.45 (ரூ.20). வெண்டைக்காய் ரூ.30 (ரூ.15), சவ்சவ் ரூ.80 (ரூ.30) மேற்கண்ட விலையில் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்த போதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து மார்க்கெட்டுகளிலும் காய்கறி விற்பனை களைகட்டியது.

Next Story