“பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வேதனை அளிக்கிறது” இல.கணேசன் பேட்டி


“பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வேதனை அளிக்கிறது” இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 14 Sept 2018 3:30 AM IST (Updated: 14 Sept 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு வேதனை அளிக்கிறது” என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

தூத்துக்குடி, 

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு வேதனை அளிக்கிறது” என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

தூய்மை இயக்கம்

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று காலையில் தூத்துக்குடி வந்தார். அவர் போல்பேட்டை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-

மகாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழா அடுத்தமாதம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை என்பது ரத்தத்தில் கலக்க வேண்டும். தூய்மைக்கான உணர்ச்சி, உணர்வு குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வர வேண்டும் என்பதற்காக ஒரு இயக்கத்தை காந்தி ஜெயந்தி அன்று தொடங்க உள்ளார். வருகிற 17-ந்தேதி நடக்கும் இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் பா.ஜனதாவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் கூட்டணி

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை நாங்கள் தொடங்கி விட்டோம். வருகிற தேர்தலில் கூட்டணி வைத்துதான் போட்டியிட உள்ளோம். ஆனால், கூட்டணி யாருடன் என்பது போக போக தான் தெரியவரும். கூட்டணிக்காக இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

ஜனநாயக நாட்டில் எந்த கட்சியும் மற்றொரு கட்சியை விமர்சனம் செய்ய உரிமை உள்ளது. ஆனால், விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பயணி விமானத்திலேயே கோஷம் போடுவது விமான பயணிகள் சட்டத்தின்படியே தவறானது. விமானத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவி சோபியாவிடம் இதுபற்றி கேட்டபோது உரிமை என்கிறார். அது இல்லை உரிமை. அப்படி இருந்தால் எந்த அரசியல் கட்சி தலைவரும் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்படும். அந்த மாணவியின் பின்னணி என்ன என்பதை கண்டறிவது தான் எங்கள் மாநில தலைவரின் நோக்கம். வழக்கு நடக்கிறது. விசாரணை முடிவில் அந்த பெண்ணின் பின்னணி என்ன என்பது தெரியவரும்.

குற்றப்பத்திரிகை

விஜய் மல்லையா ராஜ்யசபா உறுப்பினராக இருந்து இருக்கிறார். அதனால் அவர் கிடைத்திருக்கிற சலுகையை பயன்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் நடந்து சென்று உள்ளார். இதனை அவர்கள் 2 பேரும் ஒப்பு கொண்டு உள்ளனர். ஆனால் நான் லண்டனுக்கு தப்பி செல்கிறேன் என்று விஜய் மல்லையா சொன்னால், அருண்ஜெட்லி சும்மா விட்டுருக்க மாட்டார்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஆனால் அவர்கள் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எதுவாக இருந்தாலும் முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம்தான்.

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உண்மையிலேயே அபரிமிதமாக உயர்ந்து உள்ளது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. இந்த பெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்ன செய்வது என்பது குறித்து, பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி (நாளை) இது சம்பந்தப்பட்ட நபர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. நல்ல முடிவு வரும் என்று நம்புவோம்.

ஆனால் நிச்சயமாக இது மத்திய, மாநில அரசாங்கத்தின் பொறுப்பு மட்டும் அல்ல. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்வும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் தான் முக்கியமான காரணம். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் சேர்த்து விட்டால் 25 சதவீதம் விலை குறையும். அதற்கு மாநில அரசாங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும். மாநில அரசாங்கங்களை ஒப்புகொள்ள வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விநாயகர் சிலை

முன்னதாக, அவர் இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி தபசு மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த 10 அடி உயர விநாயகர் சிலையை வழிபட்டார். அப்போது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உடன் இருந்தார்.

Next Story