மண்டபம் கடலோர காவல்படை ரோந்து பணிக்கு கூடுதலாக அதிநவீன கப்பல் வருகை


மண்டபம் கடலோர காவல்படை ரோந்து பணிக்கு கூடுதலாக அதிநவீன கப்பல் வருகை
x
தினத்தந்தி 14 Sep 2018 10:30 PM GMT (Updated: 14 Sep 2018 1:44 PM GMT)

மண்டபம் கடலோர காவல்படையினரின் ரோந்து பணிக்கு கூடுதலாக அதிநவீன கப்பல் வந்துள்ளது.

பனைக்குளம்,

தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதற்கு காரணம் ராமேசுவரத்துக்கு மிக அருகில் இலங்கை கடல் பகுதி அமைந்துள்ளது தான். ராமேசுவரம் முதல் பாம்பன், மண்டபம், தொண்டி, வேதாரண்யம் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும், ராமேசுவரம் முதல் கீழக்கரை வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் உள்ள ஹோவர் கிராப்ட் கப்பல்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் காரைக்கால் கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து சி–432 என்ற எண் கொண்ட அதிக வேக கப்பல் நேற்று மாலை மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்துக்கு வந்தது. இந்த கப்பலில் துணை கமாண்டன்ட் வினய்குமார் சிங் தலைமையில் கடலோர காவல்படை வீரர்கள் 13 பேர் வந்தனர். மண்டபம் வந்த இந்த கப்பலை கமாண்டன்ட் வெங்கடேசுவரன் தலைமையிலான கடலோர காவல்படை கமாண்டோக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து கமாண்டன்ட் வெங்கடேசுவரன் கப்பலில் ஏறி ரேடார் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், எந்திர துப்பாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் ஏற்கனவே 5 ஹோவர் கிராப்ட் கப்பல்களும், 2 சிறிய ரோந்து படகுகளும் பாதுகாப்பு பணிக்காக உள்ளன. தற்போது கூடுதலாக ஒரு அதிவேக கப்பலும் இன்று (சனிக்கிழமை) முதல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி கூடுதல் ரோந்து கப்பல் வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். அதைத்தொடர்ந்து காரைக்காலில் இருந்து அதிவேக கப்பல் மண்டபம் கடலோர காவல்படை நிலையத்துக்கு வந்துள்ளது.

இந்த கப்பலில் பல்வேறு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன. மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சுமார் 27 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் ஒரு கமாண்டன்ட் தலைமையில் 15 பேர் ராமேசுவரம் முதல் வேதாரண்யம் வரையிலும், இதே போல கீழக்கரை வரையிலான மன்னார் வளைகுடா பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ராமேசுவரம் கடல் பகுதியை பொருத்தவரை பாதுகாப்பு என்பது சிறப்பாக உள்ளது. கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, கடற்படை, கடலோர போலீஸ் மற்றும் அனைத்து உளவு பிரிவுகளும் சேர்ந்து பாதுகாப்பு விசயத்தில் ஒருங்கிணைந்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். கடலோர காவல்படை மீனவர்களுடன் நல்ல உறவுமுறை வைத்துள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் அன்னியர் நடமாட்டம் தென்பட்டால் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story