ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: கோழிக்கடைக்காரர் வெட்டிக்கொலை மனைவி-மாமியாரிடம் போலீசார் விசாரணை
ஓட்டப்பிடாரம் அருகே கோழிக்கடைக்காரர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி, மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே கோழிக்கடைக்காரர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி, மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழி வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் உதயக்குமார் (வயது 29). இவர் அக்கநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். மேலும் அந்த கடை அருகே இரவில் துரித உணவகத்தையும் நடத்தினார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அக்கநாயக்கன்பட்டிக்கு அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த நிர்மலாதேவியின் மகள் மாசாதேவியை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதிலும், 1½ வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
கொலை
உதயக்குமார் வழக்கமாக இரவு கடையின் முன்பு கட்டிலில் படுத்து தூங்குவார். காலை 6 மணிக்கே எழுந்து கடையில் உள்ள வேலைகளை செய்ய தொடங்குவது வழக்கம். நேற்று காலையில் கடையின் முன்பு அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து உள்ளனர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞானசம்மந்தன், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி-மாமியாரிடம் விசாரணை
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், உதயக்குமாருக்கும், அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும், மூத்த குழந்தை உதயக்குமாரிடம் இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயக்குமாரின் மனைவி மாசாதேவி தனது உறவினர்களுடன் கணவர் வீட்டுக்கு சென்று, என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அல்லது குழந்தையை தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு உதயக்குமார், உன்னுடன் வாழவும் முடியாது, குழந்தையை தரவும் முடியாது என்று கூறியதாகவும், அதனால் மாசாதேவி கோபத்துடன் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் மாசாதேவி மற்றும் அவருடைய தாய் நிர்மலா தேவி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
மேலும், இது தொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story