விபத்தில் சிக்கியதுபோல் நடித்து போலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு 3 வாலிபர்கள் கைது


விபத்தில் சிக்கியதுபோல் நடித்து போலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 14 Sep 2018 9:30 PM GMT (Updated: 14 Sep 2018 7:21 PM GMT)

விபத்தில் சிக்கியதுபோல் நடித்து போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி(வயது 42). இவர், திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை பாலசுப்பிரமணி, பணி முடிந்து சாதாரண உடையில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்தார்.

ராயபுரம் புதிய மேம்பாலத்தில் அவர் வந்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கியது போல் அலறி துடித்தார். அருகில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த பாலசுப்பிரமணி, மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த வாலிபர்களிடம் விசாரித்தார்.

செல்போன் பறிப்பு

அப்போது அந்த வாலிபர்களில் ஒருவர் திடீரென போலீஸ்காரர் பாலசுப்பிரமணியின் சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த வாலிபரை விரட்டிச்சென்றார். உடனே மற்ற 2 வாலிபர்களும் அங்கிருந்து ஓடினர்.

உஷாரான பாலசுப்பிரமணி, ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து ராயபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக்(30) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளான திருச்சி உப்புபாரை பகுதியை சேர்ந்த டேனியல்(28), ஆத்தூரைச் சேர்ந்த சதீஷ்(19) ஆகிய மேலும் 2 பேரையும் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் பட்டினப்பாக்கம் குடிசைப்பகுதியில் தங்கி இருந்து, பல்வேறு இடங்களில் இதேபோல் விபத்தில் சிக்கியதுபோல் நடித்து வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story