யானை தந்தங்களை விற்க முயன்றவர் கைது வனத்துறையினர் நடவடிக்கை


யானை தந்தங்களை விற்க முயன்றவர் கைது வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2018 3:15 AM IST (Updated: 15 Sept 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறு பகுதியில், யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

அடையாறு,

சென்னை அடையாறு பகுதியில், யானை தந்தங்களை விற்பனை செய்வதாக வேளச்சேரி வனச்சரகர் மோகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடையாறு காந்திநகர் பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் சுற்றித்திரிந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அவருடைய பையில் 2 யானை தந்தங்கள் இருந்தன. இதையடுத்து, அவரை வேளச்சேரி வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பிராட்வே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 34) என தெரியவந்தது. முருகனுக்கும், துறைமுகத்தில் உள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. அங்குள்ள கிடங்கில் இருக்கும் அரிய பொருட்களை திருடி, முகப்பில் உள்ள குப்பை தொட்டியில் அந்த நபர் போட்டதும், அவற்றை முருகன் சேகரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இம்முறை யானை தந்தத்தை விற்க முயன்றபோது முருகன் சிக்கினார். ஒரு யானை தந்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றால், கமிஷனாக ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என முருகன் தெரிவித்தார். இதையடுத்து முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 2 யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Next Story