சேலம் காசிவிஸ்வநாதர் கோவிலில் சாமி சிலையை வீசிய மர்ம ஆசாமியின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவு


சேலம் காசிவிஸ்வநாதர் கோவிலில் சாமி சிலையை வீசிய மர்ம ஆசாமியின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவு
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 8:30 PM GMT)

சேலம் காசிவிஸ்வநாதர் கோவிலில் சாமி சிலையை வீசிய மர்ம ஆசாமியின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மணல் மார்க்கெட் அருகே மிகவும் பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நடராஜர் சன்னதி அருகே கடந்த 12-ந் தேதி இரவு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் அர்த்தநாரீஸ்வரர் சாமி சிலை இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சேலம் டவுன் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இந்த சிலை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். காசி விஸ்வநாதர் கோவிலில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், மர்ம ஆசாமி ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அதாவது மஞ்சள் பையில் சிலையை கொண்டு வரும் ஆசாமி, நடராஜர் சன்னதியில் நைசாக வீசி விட்டு சென்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சிலையை வீசி சென்ற மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த சிலை கடத்தி வரப்பட்டதா? அல்லது சிலையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு அதை வீட்டில் வைக்கக்கூடாது என்பதற்காக இங்கு வீசி செல்லப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story