மண்ணச்சநல்லூர் அருகே வாய்க்காலில் கிடந்த பேரலை சிறுவர்கள் உடைத்த போது ரசாயனம் வெளியேறியதால் பாதிப்பு


மண்ணச்சநல்லூர் அருகே வாய்க்காலில் கிடந்த பேரலை சிறுவர்கள் உடைத்த போது ரசாயனம் வெளியேறியதால் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 10:45 PM GMT)

மண்ணச்சநல்லூர் அருகே வாய்க்காலில் கிடந்த பேரலை சிறுவர்கள் உடைத்த போது அதில் இருந்து வெளியேறிய ரசாயனம் ஒரு கிலோ மீட்டருக்கு துர்நாற்றமும், பொதுமக்களுக்கு கண் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, சிலையாத்தி அருகே உள்ள அய்யன் வாய்க்காலில், கடந்த சில நாட்களுக்கு முன் சந்தேகத்திற்குரிய வகையில் ஊதா நிறம் கொண்ட பேரல் ஒன்று கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு சோதனை நடத்தினர். இதில் அந்த பேரல் உள்ளே ஏதோ திரவம் நிரப்பப்பட்டு அதனை இரும்பு மூடி மூலம் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் போலீஸ் நிலையம் எடுத்துச்சென்று அதில் உள்ள திரவம் எந்த வகையை சேர்ந்தது என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி அய்யன் வாய்க்கால் படித்துறையில் அதேபோன்று பேரல் ஒன்று கிடந்தது. இதனைகண்ட அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கற்களால் அந்த பேரலை அடித்து உடைத்தனர். அப்போது பேரல் உள்ளே இருந்து வெள்ளை நிறத்தில் ரசாயனம் வெளியேறியது. இது அந்த பகுதியை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை அதிக துர்நாற்றத்தையும், பொதுமக்களுக்கு கண் எரிச்சலையும் ஏற்படுத்தியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் இதுகுறித்து கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இதுகுறித்து வாத்தலை போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமலர் ஆகியோருக்கு நடந்த சம்பவம் குறித்து செல்போனில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாத்தலை போலீசார் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புபணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேரலில் இருந்து வெளியேறிய ரசாயனம் குறித்து அவை எந்த வகையை சேர்ந்தது. அதனால் விளைவுகள் ஏதும் ஏற்படுமா என சோதனை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த ரசாயனத்தின் பெயர் ‘புரோப்பனோன்‘ ஆகும். இது நிறமற்ற நெடியுள்ள நீர்மம், இது எளிதில் பல்லுறுப்பாகக்கூடியது. மனித தோலை அரிக்கும் தன்மையுடையது, கண் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றனர்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பேரலை இரும்பு சுத்தியல் மூலம் உடைத்து ரசாயனத்தை முழுமையாக வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தபின் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த ரசாயன பேரல் வாய்க்காலுக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story