பிளாஸ்டிக்கை கொடுத்தால் குடிநீர் கிடைக்கும்!


பிளாஸ்டிக்கை கொடுத்தால் குடிநீர் கிடைக்கும்!
x
தினத்தந்தி 15 Sep 2018 12:19 PM GMT (Updated: 15 Sep 2018 12:19 PM GMT)

இன்று இந்தியா சந்திக்கும் இரு பெரும் பிரச்சினைகள், பிளாஸ்டிக் குவியலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர்ப் பற்றாக்குறையும். இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், மும்பை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் இருவர்.

அனுராக் மீனா, சத்யேந்திர மீனா என்ற அவர்கள் உருவாக்கி யிருக்கிற எந்திரம், பிளாஸ்டிக் கழிவுகளைப் பெற்றுக்கொள் கிறது, அதற்குப் பதிலாக தூய குடிநீரை வழங்குகிறது.

இல்லை, நீங்கள் நினைப்பது போல இது பிளாஸ்டிக்கில் இருந்து தண்ணீரை உருவாக்குவதில்லை. மாறாக, இந்த எந்திரத்தில் உள்ள ஆர்ஓ தண்ணீர் வடிகட்டி அமைப்பு, இதில் ஊற்றப்படும் தண்ணீரை வடிகட்டி வழங்குகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களை அழுத்தி நசுக்கி வைத்துக்கொள் வதற்கு தனிப் பகுதி உள்ளது. அதில் 80 சதவீத பகுதி நிரம்பியவுடன், இக்கருவியை கவனிப்பவருக்கு சமிக்ஞை அளிக்கப்படுகிறது. உடனே அவர், தனியாக கழற்றக்கூடிய சேமிப்புப் பகுதியைக் கழற்றி, அதில் உள்ளவற்றை அகற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவிடுகிறார்.

இதன் மூலம், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவ முடியும், மக்க ளுக்கு, குறிப்பாக நகர்ப்புற ஏழை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க முடியும் என்பது இவர்களின் நம்பிக்கை.

சுமார் நூறு நாட்களில் இந்த எந்திரத்தை இவர்கள் திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள். ஓர் ஏ.டி.எம். எந்திரம் போல தொடுதிரையுடன் மிக நவீனமாக இது காட்சியளிக்கிறது.

இந்தக் கருவியின் மூலம் நமது நகர்ப்புறங்களில் சுத்தத்தைப் பராமரிக்க முடியும், மக்களிடம் அதற்கான மனோபாவத்தை வளர்க்க முடியும் என்கிறார்கள் இவர்கள். மக்கள் தாங்கள் கொடுக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில், கேன்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஒரு டோக்கன் அளிக்கப்படும். ஒரு டோக்கன் மூலம் 300 மி.லி. குடிநீரைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சண்டிகார் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம், டிரெஸ்டார். இது, மும்பை மாணவர்களின் எந்திரத்தை சந்தைப்படுத்தி வருகிறது.

சண்டிகார், மும்பையில் இந்த எந்திரம் மிகுந்த வரவேற்போடு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மும்பை ஐ.ஐ.டி.யிலேயே இது நிறுவப்பட்டு, வாரந்தோறும் பல கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிவருவதாகவும் டிரெஸ்டார் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

மற்ற பெருநகரங்களிலும், ரெயில்வே நிலையங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் இந்த எந்திரத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

ஓர் எந்திரத்தை அமைப்பதற்கு ரூ. 1 லட்சம் வரை செலவானாலும் இதன் பயனும், தேவையும் அதிகம் என்பதால் அதிக எண்ணிக்கையில் இதை தயாரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக அனுராக் மீனா, சத்யேந்திர மீனாவும், ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினரும் கூறுகின்றனர்.

பாராட்டுக்குரிய முயற்சி! 

Next Story