வேலூரில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
வேலூரில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. முடிவில் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.
வேலூர்,
நாடு முழுவதும் கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்திலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்து முன்னணி சார்பில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. 3-ம் நாளான நேற்று வேலூர் மாநகரில் வைக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் (விசர்ஜனம்) நடந்தது.
மேளதாளம்
வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்துக்கு ஜவுரிலால்ஜெயின் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தனசேகர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஊர்வலத்தின் நோக்கம் குறித்து பேசினார். ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் சாந்தாசுவாமிகள், இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது ஏராளமான இளைஞர்கள் மேளதாளம், தப்பாட்டம் அடித்தபடி ஆடிக் கொண்டு உற்சாகமாக சென்றனர். செல்லும் வழியில் பலர் தங்களது வீடுகளின் மாடிகளில் இருந்து வேடிக்கை பார்த்தனர். பலர் தங்களது செல்போனில் புகைப்படம், ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
கரைப்பு
ஊர்வலமானது காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை மெயின் பஜார் அருகே சென்றபோது, அங்கு மசூதி இருந்ததால் போலீசார் இருபுறமும் அரண்போல் நின்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து கிருபானந்த வாரியார் சாலை, லாங்கு பஜார் வழியாக அண்ணா கலையரங்கத்தை ஊர்வலம் அடைந்தது. பின்னர் மீண்டும் ஊர்வலம் கோட்டை சுற்றுச்சாலை வழியாக சென்றது. இந்த சிலைகள் கொணவட்டம் வழியாக செல்ல போலீசார் தடைவிதித்தனர். இதனை தொடர்ந்து மாங்காய் மண்டி அருகே சாலை தடுப்புகள் அமைத்து போலீசார் அரண்போல் நின்றனர்.
இந்த நிலையில் மாங்காய்மண்டி அருகே ஊர்வலம் வந்தபோது இந்து முன்னணியினர் சர்வீஸ் சாலை வழியாக சதுப்பேரி ஏரி நோக்கி சென்றனர். அங்கு ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டது.
பரபரப்பு
கொணவட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 18 சிலைகள் ஊர்வலம் கொணவட்டம் சாலை வழியாக சென்றது. அங்குள்ள மசூதி அருகே சென்றபோது, திடீரென ஒரு தரப்பினர் மசூதி மீது மர்மநபர்கள் கற்களை வீசியதாக கூறி சத்தம் போட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்களும் பதிலுக்கு சத்தம் போட்டனர். மசூதி அருகே போலீசார் சாலை தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்து ஊர்வலம் கடந்து, சதுப்பேரி ஏரி நோக்கி சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஊர்வலத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, லோகநாதன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலும் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story