பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறப்பு
பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்த வைகை தண்ணீரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மலர் தூவி வரவேற்றார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து கடந்த 10–ந்தேதி முதல் வருகிற 27–ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. மாலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட்டார். பின்பு மதகு அணைகளின் வழியாக ஓடிய தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.
இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை சென்றடையும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், பரமக்குடி யூனியன் ஆணையாளர் சந்திரமோகன், தாசில்தார் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.