குடிநீர் வசதி கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை
குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள செல்லபிள்ளைகரடு கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரி பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர்.£ மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பிறகு மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:–
செல்லப்பிள்ளைகரட்டில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றோம். இந்த பகுதியில் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றி தரக்கோரி மனு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இந்த திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து விட்டது. ஆனால் ஒராண்டு ஆகியும் குழாய் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் குடிநீருக்கு அருகில் தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
திட்டத்தை செயல்படுத்தியும் பயன்பாட்டுக்கு வராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.