பா.ஜனதா அரசை குறைகூற காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை - இல.கணேசன் பேட்டி


பா.ஜனதா அரசை குறைகூற காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை -  இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 18 Sept 2018 4:15 AM IST (Updated: 18 Sept 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா அரசை குறை கூற காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை என்று திருப்பூரில் இல.கணேசன் கூறினார்.

திருப்பூர்,

பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கரட்டாங்காடு பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு 3-ம் மண்டல தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி சரி செய்து நாட்டை முன்னேற்றப்பாதையில் கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு சென்றுள்ளார். அவரது செயல்பாடுகளை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள். அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். குன்னூரில் பா.ஜனதா கட்சி நிர்வாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசார் முனைப்புகாட்டவில்லை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சரியான தண்டனை வழங்க வேண்டும்.

தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பிரச்சினை குறித்து ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டேன். நீதிமன்றம் நேரில் ஆஜராக அழைப்பு விடுத்துள்ளது. அவர் அங்கு அனைத்து உண்மை நிலவரத்தையும் விளக்கி கூறுவார். நேரில் சந்தித்து இது குறித்து கேட்டறிய வாய்ப்பு கிடைக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் 2 விதமான பதிவுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. 2 பதிவுகளும் வெவ்வேறு கருத்துகளாக உள்ளன.

இதில் எதை அவர் கூறினார் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இயலவில்லை.எச்.ராஜா சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசக் கூடியவர். ஆனால் இதை அனைத்து கட்சியினரும் பெரிதுபடுத்தி விட்டனர். இது திசை திருப்பும் செயலாகவே உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பா.ஜனதாவினரும் தான் பாதிக்கப்படுகிறார்கள். டாலர் மதிப்பு அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடனை பா.ஜனதா அரசு அடைத்துள்ளது. பா.ஜனதா அரசை குறைகூற காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலில் கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்டபோது, தேர்தலில் கூட்டணிவைத்து தான் போட்டியிடுவோம். யாரோடு என்பது போக போக தெரியும். அனைத்து கட்சியினரையும் சமமாக வைத்து தான் பார்க்கிறோம். அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால் சுமூகமான உறவு வைத்து, அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கட்சி ரீதியான நட்பு இருப்பதாக சிலர் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதனால் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இதில் எந்த உண்மையும் இல்லை என்று இல.கணேசன் கூறினார்.

Next Story