இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் சப்-கலெக்டரிடம் திருநங்கைகள் கோரிக்கை
‘வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்‘ என சப்-கலெக்டரிடம் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்ட சமூகநலத்துறை, போகர் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு, தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த முகாமுக்கு சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். போகர் தொண்டு நிறுவன இயக்குனர் கார்த்திகாயினி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட சமூகநல அலுவலர் முத்துமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சப்-கலெக்டர் பேசும்போது, பழனி பகுதியில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வாதாரத்துக்காக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் திருநங்கைகள் ஒன்றிணைந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கலாம் என்றார்.
இதையடுத்து திருநங்கைகளுக்கு வழங்கப்படும் உதவிகள், தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதன் பின்னர் சப்-கலெக்டரிடம், திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது, தாங்கள் அனைவரும் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். போதிய வருமானம் இல்லாததால் வாடகை கொடுக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் பேசிய சப்-கலெக்டர், அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முகாமில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story