‘ஹெல்மெட்’ அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தலைப்பாகை அணிந்து வந்தவர்கள் மனு


‘ஹெல்மெட்’ அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தலைப்பாகை அணிந்து வந்தவர்கள் மனு
x
தினத்தந்தி 18 Sept 2018 6:58 AM IST (Updated: 18 Sept 2018 6:58 AM IST)
t-max-icont-min-icon

‘ஹெல்மெட்’ அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், தலைப்பாகை அணிந்து வந்தவர்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சி தேவதானம் பகுதி மூவேந்தர் நகரில் உள்ள ஆதிநாயக சத்தியஞான சபையை சேர்ந்தவர்கள் ஆதிமாணிக்கம் சுவாமி தலைமையில் பச்சை நிற தலைப்பாகை அணிந்து வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் சபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கட்டாயம் பச்சை நிறத்தில் தலைப்பாகை அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. தற்போது காவல்துறை ஹெல்மெட் அணியவேண்டும் என்று கூறுவதால் நாங்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைப்பாகைக்கு மேல் ஹெல்மெட் அணிவது இறைநம்பிக்கைக்கு பங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே புதுக்கோட்டை மெய்வழிச்சாலை அன்பர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது போல் எங்களுக்கும் விலக்கு அளிக்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்,’ என்று கூறப்பட்டு இருந்தது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பாதுகாவலர்களாக பணிபுரிந்து வந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அல்லாதோர் 280 பேர், தங்களை வேலைக்கு வைத்து இருந்த தனியார் நிறுவனம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டதால் மீண்டும் வேலை வழங்க கோரியும், 2 மாத சம்பள பாக்கியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், மனு கொடுத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘திருச்சி- சிதம்பரம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால் அதனை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. கல்லகம் கிராமத்தில் சுமார் 400 வீடுகள், கோவில்கள், முக்கிய தெருக்கள் வழியாக சாலை அமைக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த 400 வீடுகளில் வசிப்பவர்களும் வாழ்வாதாரம் இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்கும் பணியை தொடங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் சுற்றுச்சாலை அமைத்து சாலை பணியை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என கூறி இருந்தனர்.

இதேபோல் கல்லகம் ஜன்னத்துன் நயீம் ஜும்மா பள்ளிவாசலை சேர்ந்த முஸ்லிம்கள் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தினால் தங்களது பள்ளிவாசல் மற்றும் 20 பேரின் வீடுகள் இடிக்கப்படும் என்பதால், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தந்து விட்டு நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கும்படி மனு கொடுத்தனர்.

திருவானைக்காவல் திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த இன்பவள்ளி என்ற பெண், கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் என அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவர் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. உடனடியாக அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எனது கணவர் நாகராஜன் கடந்த 2009-ம் ஆண்டு இறந்து விட்டார். எனது கணவரின் முதலாவது மனைவிக்கு பிறந்த மகள்கள் 2 பேரும், அவர்களது வாரிசுகளும், எனது கணவரின் மரணத்திற்கு பின் நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். எனது வீட்டுக்குள் புகுந்து டி.வி., மிக்சி உள்ளிட்ட பொருட்களை அள்ளி சென்று விட்டனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் விதவை பெண்ணான என் புகார் மனு மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சென்னைக்கு சென்று தலைமை செயலகம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன். அரசே எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

அந்த பெண் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story