4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் ஆவார்.
சிதம்பரம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவருடைய மகன் தமிழ்வேந்தன் (வயது 26). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்து வந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இவர், சரியாக கல்லூரிக்கு வரவில்லை. எனவே தமிழ்வேந்தன், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 6 மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த தமிழ்வேந்தன், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் தமிழ்வேந்தன், தனது மோட்டார் சைக்கிளில் சேந்தன்குடியில் இருந்து சிதம்பரத்துக்கு வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்துக்கு வந்த தமிழ்வேந்தன், வேகமாக படிகளில் ஏறி 4-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.
இதில் தமிழ்வேந்தனின் கால், கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்வேந்தன் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து இளஞ்செழியன், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story