ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் தற்காலிக சாலையில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி ஆரம்பம்


ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் தற்காலிக சாலையில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி ஆரம்பம்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:28 AM IST (Updated: 19 Sept 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மாற்று வழியாக அமைக்கப்படும் தற்காலிக சாலையில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. மழை பெய்தால் ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 450 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர். இந்த தரைப்பாலம் வழியாகதான் தற்போது ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் 65 நாட்கள் வாகன போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது. மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிறுவனம் மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது.

தரைப்பாலத்தில் இன்னும் சில நாட்களில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்க உள்ளனர். இப்படி தடைவிதித்தால் வாகனங்கள் வந்து செல்வதற்காக தரைப்பாலத்தின் கிழக்கு திசையில் தற்காலிக சாலை அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மழை பெய்து ஆரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது தற்காலிகமாக அமைக்கப்படும் சாலை பாதிக்கப்படாமல் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏதுவாக அதில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படுள்ளது.

Next Story