பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 12:49 PM GMT)

டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் ராஜா, சிவகுமார், பொது செயலாளர் பழனிபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நெல்லை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் வேறு தாலுகாவுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். பல இடங்களில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் அருகே பார் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், மேலாண்மை இயக்குனர் உத்தரவை அமல்படுத்தவில்லை. டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நெல்லை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் கோபிநாத், துணை செயலாளர் மரகதலிங்கம், நெல்லை மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன், மாவட்ட தலைவர் பெர்டினாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story