பாளையங்கோட்டையில் வேன் டிரைவரை தாக்கி ரூ.3½ லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


பாளையங்கோட்டையில் வேன் டிரைவரை தாக்கி ரூ.3½ லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 2:17 PM GMT)

பாளையங்கோட்டையில் வேன் டிரைவரை தாக்கி ரூ.3½ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் வேன் டிரைவரை தாக்கி ரூ.3½ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிஸ்கட் வேன் 

சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த கம்பெனியில் சின்ன காஞ்சீபுரம் பூந்தோட்டத்தை சேர்ந்த பாபு (22) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் வேனில் பிஸ்கட்டை ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்வார்கள். அப்போது வசூலாகும் பணத்தை கம்பெனியில் செலுத்துவார்கள். 2 பேரும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பிஸ்கட் விற்பனை செய்த பணம் 3 லட்சத்து 63 ஆயிரத்துடன் நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவிலில் இருந்து காஞ்சீபுரத்திற்கு வேனில் சென்றனர்.

ரூ.3½ லட்சம் பறிப்பு 

நள்ளிரவு 1.15 மணி அளவில் வேன் பாளையங்கோட்டை சீனிவாசநகர் அருகே 4 வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் 6 பேர் அந்த வேனுக்கும் முன்னும், பின்னும் சென்று வேனை மறித்துக்கொண்டே சென்றனர். பின்னர் கக்கன்நகர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது வேனுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வேனை வழிமறித்தனர். உடனே ராமச்சந்திரன் வேனை நிறுத்தினார்.

உடனே மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளால் வேனை அடித்து உடைத்தனர். தொடர்ந்து அந்த கும்பல் ராமச்சந்திரன், பிரபு ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த 2 பேரையும் அந்த பகுதியில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை 

இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்– இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகையை பதிவு செய்தனர். மேலும் அந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ராமச்சந்திரனிடம், கடந்த ஆண்டு காஞ்சீபுரத்தில் வைத்து ரூ.8 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. இதனால் போலீசாருக்கு ராமச்சந்திரன் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் மற்றும் பிரபுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

Next Story