வியாபாரி வீட்டில் 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்


வியாபாரி வீட்டில் 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 7:02 PM GMT)

திண்டுக்கல் அருகே வியாபாரி வீட்டில் இருந்து 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தாடிக்கொம்பு, 


திண்டுக்கல்லை அடுத்த அகரம் அருகே உள்ள கிரியம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் கவுதம்ராஜ் ஆகியோர் பெரியசாமியின் கடையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பெரியசாமியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு ஒரு அறையில் சுமார் 30 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கும் ஒரு அறையில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து பெரியசாமியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றை பிரித்து சாக்கு மூட்டைகளில் கட்டி தேனி, திருச்சி, மதுரை உள்பட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய கடை மற்றும் வீடுகளில் இருந்து சுமார் 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜனிடம் கேட்டபோது, பெரியசாமியின் வீட்டில் இருந்து 50 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும். இந்த பொருட்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர், பெரியசாமி மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

Next Story