சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்


சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Sep 2018 9:45 PM GMT (Updated: 19 Sep 2018 9:44 PM GMT)

குமரி மாவட்டத்தில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,


மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் மகாதேவர் கோவில் உள்ளது. இது குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 2-வது கோவில் ஆகும். இந்த கோவிலில் கடந்த மாதம் கொள்ளையர்கள் புகுந்து சிலைகள், நகைகள், காணிக்கை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றார். அங்கு கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டார். அத்துடன் கோவில் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பலஆண்டுகளாக திட்டமிட்டு சிலைகள் திருடப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து விலைமதிக்க முடியாத சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளனர். இந்த சிலை கடத்தல் சம்பவங்களில் இந்தியா முழுவதும் முக்கிய நபர்கள் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சிலைகள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த சிலைகளின் மதிப்புகளை குறைவாக அளவீடு செய்து எழுதி வைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுகிறது. காரணம் சிலைகள் கொள்ளை போகும் போது, அதன் மதிப்புகளை குறைத்து கூறுகிறார்கள். ஆனால், அந்த சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு வரும்போது அதன் மதிப்பு கூடுகிறது.
எனவே, கோவில்களில் உள்ள சிலைகளை மதிப்பீடு செய்ய புதிய குழு அமைத்து,சிலைகளின் உண்மையான மதிப்புகளை ஆய்வு செய்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

திக்குறிச்சி கோவிலில் இருந்து கொள்ளை போனவை ஐம்பொன் சிலைகள் என பக்தர்கள் கூறுகிறார்கள். ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் வேறு விதமாக கூறுகிறார்கள். குமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சிலை திருட்டு வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள், பணியாளர்களுக்கு மிக குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக வழங்க வில்லை. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story