திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் நீர்வரத்தினை கலெக்டர் ஆய்வு


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் நீர்வரத்தினை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sep 2018 1:28 AM GMT (Updated: 20 Sep 2018 1:28 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் நீர்வரத்தினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் நீர்வரத்தினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக திருவாரூர் அருகே உள்ள மாங்குடியில் பாண்டவையாற்றில் நீர்வரத்தினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஆற்றில் பெறப்படும் நீரின் அளவு, சுற்றுப்புற கிராமங்களின் பாசனத்திற்கு வாய்க்கால்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவு ஆகிய விவரங்களை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து மாங்குடி கிராமத்திற்குட்பட்ட பாசன வாய்க்கால், மாவூரில் வெள்ளையாறு, புதூரில் வெண்ணாறு ரெகுலேட்டர்கள், மாறங்குடியில் பாசன வாய்க்கால் மற்றும் கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி பாசன வாய்க்கால், அரிச்சந்திரா ஆறு ஆகியவற்றில் நீர்வரத்தின் அளவு மற்றும் பயன் பெறும் விவசாய நிலங்களில் அளவுகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அனைத்து இடங்களிலும் விவசாயிகளிடம் தண்ணீர் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து, வழங்கப்படும் தண்ணீர் அளவு குறித்து விளக்கி கூறினார். மேலும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பொன்னிறை கிராமத்தில் வெண்ணாறு நீரொழிங்கியை பார்வையிட்டு நீர் தேக்கம் மற்றும் உள் வாய்க்கால்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம், வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story