போலீசார் தாக்கியதாக கூறி ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி
ஆண்டிப்பட்டி அருகே வாகன சோதனையின்போது போலீசார் தாக்கியதாக கூறி ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 28). இவர் க.விலக்கு பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையிலிருந்து நேற்று முன்தினம் இரவு பணி முடித்தவர்களை ஏற்றிக்கொண்டு இளையராஜா ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது ஆண்டிப்பட்டி வைகை அணை சாலைப்பிரிவு சிலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இளையராஜா ஓட்டி வந்த ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினார்கள். இதையடுத்து இளையராஜா உரிய ஆவணங்களை காட்டினார். எனினும் அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டிற்கு வந்த இளையராஜா பெரும் மனஉளைச்சலில் இருந்தார். பின்னர் அவர் திடீரென தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளையராஜாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி மற்றும் க. விலக்கு போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கணபதிராஜ் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இந்த புகார் மனுவில் இரவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இளையராஜாவை சோதனை என்ற பெயரில் மறித்த போலீசார் அவரை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதோடு, அவர் மது அருந்தியுள்ளதாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த இளையராஜா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவே ஆட்டோ டிரைவர் இளையராஜாவை தாக்கிய போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story