திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 7:43 PM GMT)

தொப்பூர் அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

நல்லம்பள்ளி,

திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகள் பாவன்யா (வயது 20). இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய அக்கா சோனியா. இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் மாணவி பாவன்யா அடிக்கடி அக்கா வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது அதேபகுதியை சேர்ந்த செல்வராஜ் என்ற வாலிபருடன், பாவன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் செல்வராஜ், பாவன்யா திருமணம் நடந்தது. கடந்த 10-ந்தேதி பாவன்யா பெற்றோர் வீட்டுக்கு வந்தார். கடந்த 14-ந்தேதி புதுப்பெண் பாவன்யா அதிக அளவில் மாத்திரைகளை தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதையறிந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை பாவன்யாவை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் புதுப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story