காடுகளை பாதுகாக்க தவறும் வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை


காடுகளை பாதுகாக்க தவறும் வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Sept 2018 2:09 PM IST (Updated: 22 Sept 2018 2:09 PM IST)
t-max-icont-min-icon

காடுகளை பாதுகாக்க தவறும் வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார்.

நெல்லை, 

காடுகளை பாதுகாக்க தவறும் வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார்.

மான் பூங்கா

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் அம்பை வனச்சரக பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். பாபநாசம் மலையில் அகஸ்தியர் அருவியை பார்வையிட உள்ளேன். தாமிரபரணி ஆற்றில் 20 வகையான மீன்கள் உள்ளன. பாபநாசத்தில் ரூ.20 லட்சம் செலவில் மீன் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன். மேலும் தாமிரபரணி ஆற்றின் மற்றொரு பெயரான ‘பொருநை பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. இதற்கு வனத்துறை சார்பில் ரூ.15 லட்சமும், மீதி நன்கொடையாளர்கள் மூலமும் வழங்கப்படுகிறது.

கங்கைகொண்டான் மான் பூங்காவை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனுமதி வழங்கப்பட்டு மான் பூங்கா மேம்படுத்தப்படும்.

கட்டணம் கிடையாது

அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்காக கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வனத்துக்குள் நுழைவதற்காகவும், சூழல் பாதுகாப்புக்கும் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதுவும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று, தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. இனிமேல் அகஸ்தியர் அருவிக்கு செல்வோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அகஸ்தியர் அருவிக்கு சவாரி செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை டோக்கன் செலுத்தினால் போதும்.

வனத்துக்குள் பொதுமக்களை அனுமதிப்பதால் சுகாதார கேடு மற்றும் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. தேக்கு மரங்களை கடத்தி புதுச்சேரியில் விற்பனை செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வனத்துறையின் தற்காலிக வன காப்பாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடும் நடவடிக்கை

இதுதவிர வனத்தில் இருந்து மரம் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். காடுகளை பாதுகாக்கும் பணியில் இருந்து தவறும் பட்சத்தில் வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லையில் தனியார் வளர்த்து வந்த யானை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் தவறான நடவடிக்கை எடுத்திருந்தால் அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்டை தடுப்பு காவலர்

வேட்டை தடுப்பு காவலர்கள்தான் வனத்துறை பாதுகாப்பின் ஆணிவேர் ஆவார்கள். அவர்களுக்கு ரூ.6,750 ஆக இருந்த சம்பளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உள்ளார். மேலும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் வேட்டை தடுப்பு காவலர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர்.

யானைகள், மலை அடிவாரத்தில் உள்ள வயல்வெளி பகுதிக்குள் நுழைவதை தடுக்க அகழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேன் கூடுகள் அமைத்து தேனீக்கள் மூலம் யானைகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காட்டு பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.4 லட்சமும், பயிர் சேதத்துக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

பேட்டியின்போது நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., மாநில அமைப்பு செயலாளர்கள் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சுதா பரமசிவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர் தீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story