மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 9:20 PM GMT)

மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே உள்ளது கெங்கபுரம் கிராமம். இங்குள்ள அம்பேத்கர் காலனி பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீர்த் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படும் மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் கெங்கபுரம் கிராமத்தில் கள்ளப்புலியூர்-வளத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம், வளத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், மேலும் குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகரிகள் உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story