வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் கலெக்டர் கணேஷ் ஆய்வு


வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் கலெக்டர் கணேஷ் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sep 2018 10:45 PM GMT (Updated: 23 Sep 2018 9:16 PM GMT)

வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியல்் திருத்தப்பணி சிறப்பு முகாமை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி 2019-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல்் திருத்தப்பணி சிறப்பு முகாம்கள் கடந்த 1-ந்தேதி (சனிக் கிழமை)முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று வாக்குசாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மவுண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கலனிவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி, ஒத்தப்புலிகுடியிருப்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது சிறப்பு முகாம்களில் வாக்காளர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ல் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், ஒரே வாக்குசாவடியில் பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-விலும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8 ஏ-விலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்யலாம். எனவே வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாமினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

முன்னதாக கலெக்டர் கணேஷ் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை ஆய்வு செய்தபோது, வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், வட்டாட்சியர்கள் பரணி (புதுக்கோட்டை), ரமேஷ் (திருமயம்), வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story