பாலாற்றை பாதுகாக்க அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க.


பாலாற்றை பாதுகாக்க அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க.
x
தினத்தந்தி 24 Sept 2018 3:15 AM IST (Updated: 24 Sept 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

பாலாற்றை பாதுகாக்க அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும் தான் என்று காவேரிப்பாக்கத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பனப்பாக்கம், 


வேலூர் கிழக்கு மாவட்டம் சோளிங்கர், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் ‘பாலாற்றை பாதுகாப்போம், பாசனத்தை பெருக்குவோம்’ என்ற விழிப்புணர்வு கூட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் பி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் சரவணன், தீனதயாளன், சக்கரவர்த்தி, எம்.கே.முரளி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஒரு மாநாட்டிற்கு வருவதுபோன்று திரண்டு வந்துள்ள உங்களை பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நாம் பாலாற்றை மீட்டெடுப்போம். இங்குள்ள திருப்பாற்கடல் பாலாற்றில் பால் போன்று ஓடியது பாலாறு. தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. பாலாற்றை பாதுகாக்க முன்வரவில்லை. 1996-ல் ‘பாலாற்றை பாதுகாப்போம்’ என வாணியம்பாடியில் இருந்து சைக்கிள் பேரணி நடத்தியவர் ராமதாஸ்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஆற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். தடுப்பணைகள் கட்டினால் வெள்ளக்காலத்தில் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் வளம்பெறும். விவசாயிகளுக்கும், நீர்வள மேலாண்மைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய கட்சி பா.ம.க. தான். மணல் கொள்ளைக்காக பல போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதுதான். தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் என மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்கள் உள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்போம். வேலைவாய்ப்புக்காக பல திட்டங்களை வைத்து உள்ளோம். பாலாற்றை பாதுகாக்க அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும் தான். நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை அகற்றி பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியில் அமரும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு, மாவட்ட நிர்வாகிகள் ஜெகன்நாதன், துளசிராமன், கார்த்திராஜா, ஜெனா, பரசுராமன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, பச்சையப்பன், ஜெகன், நகர நிர்வாகிகள் தினகரன், ராமு, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் நந்தகுமார் நன்றி கூறினார். 

Next Story