தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றக்கோரி சாலை மறியல்


தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Sep 2018 11:58 PM GMT (Updated: 23 Sep 2018 11:58 PM GMT)

திருத்தணி அருகே வீடுகளுக்கு மேல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி காலனியில் உள்ள தெருக்களில் அங்குள்ள வீடுகளுக்கு மேலாக மிகவும் தாழ்வாக மின் கம்பிகள் செல்கிறது.

இந்த மின்கம்பிகளை அகற்ற வேண்டும். அவற்றை ஆபத்து இல்லாத வகையில் அமைக்க வேண்டும் எனக்கோரி வேலஞ்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் மின்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ஆனால் அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றக்கோரியும், நேற்று வேலஞ்சேரி காலனியை சேர்ந்த பொதுமக்கள் திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலை வேலஞ்சேரி காலனியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைப்பற்றி அறிந்த திருத்தணி தாசில்தார் செங்கலா, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் மின்சாரத்துறை அலுவலர்கள் உடனடியாக அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story