எடக்காடு பஜாரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


எடக்காடு பஜாரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 24 Sep 2018 9:30 PM GMT (Updated: 24 Sep 2018 7:27 PM GMT)

எடக்காடு பஜாரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே உள்ளது எடக்காடு. இந்த பகுதியை சுற்றி எமரால்டு, காந்திகண்டி, இத்தலார், பிக்கட்டி, முள்ளிகூர், கன்னேரி, தங்காடு, மணியட்டி, மீக்கேரி உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக மஞ்சூருக்கு சென்று வர எடக்காடு பகுதியை வழித்தடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் எடக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காரணங்களால் எடக்காடு பஜார் மக்கள் மற்றும் வாகனங்கள் நெருக்கடியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் அங்குள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும் போது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது தவிர இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே தவறி விழுந்து காயமடையும் நிலை இருக்கிறது.

எனவே எடக்காடு பஜாரில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, எடக்காடு பஜார் சுற்றுவட்டார கிராம மக்களின் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. ஆனால் இங்குள்ள சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி குண்டும், குழியுமான அந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story