வங்கி காவலாளி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


வங்கி காவலாளி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Sept 2018 3:15 AM IST (Updated: 25 Sept 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி கீழக்கரையை சேர்ந்தவர் வீரநாராயணன்(வயது 51). இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். வீரநாராயணன், ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

அதன்பிறகு வீரநாராயணன், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வங்கி சார்பில் துப்பாக்கி வழங்கப்பட்டது. தினமும் இரவு பணிமுடிந்ததும், வீரநாராயணன் அந்த துப்பாக்கியை தனது வீட்டுக்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மதியம் 12 மணி அளவில், தனது மகள் ஒருவரிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டார். உடனே அவரும், குடிக்க தண்ணீர் கொடுத்தார். அந்த தண்ணீரை குடித்ததும் வீரநாராயணன், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றார்.

12.30 மணி அளவில் வீரநாராயணன் இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது. உடனே அவரது மனைவி மற்றும் மகள்கள் அந்த அறைக்கு ஓடிச்சென்றனர். அப்போது வீரநாராயணனின் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு, வெளியேறியது. அவரது கையில் துப்பாக்கி இருந்தது. சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து அவரது மனைவி, மகள்கள் கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார் விரைந்து சென்று, வீரநாராயணனின் உடலை கைப்பற்றி, அவரது மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனது தாடைப்பகுதியில் துப்பாக்கியை வைத்து, மேல்நோக்கி சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு தாடையை துளைத்துக்கொண்டு உச்சி தலை வழியாக வெளியேறியுள்ளது தெரியவந்தது.
மேலும் அவரது உடல் அருகில் கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எனக்கு மூட்டு வலி இருப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து வீரநாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story