விவசாயி, வாயில் பூட்டுப்போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


விவசாயி, வாயில் பூட்டுப்போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 3:30 AM IST (Updated: 29 Sept 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் வாயில் பூட்டுப்போட்டு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:- 2017-18-ம் ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து 3 மாதங்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதனை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தித்தொடர்பாளர் பிரபாகரன்:- பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட கீழையூர் விவசாயி ராமமூர்த்தி குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் தர வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன் வடிகால் வசதிகளை சரி செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா பாசன தாரர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் குரு.கோபிகணேசன்:- குறுவை தொகுப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளையும், தவறுகளையும் சரி செய்து நடவு எந்திர மானியத்தை தகுதியான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காவிரி டெல்டாவில் தாளடி சம்பாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் கடல் அரிப்பு பாதுகாப்பு திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம்:- தொடக்க வேளாண்மை வங்கி மூலம் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்து புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் விவசாயம் செய்ய முதலீட்டு மானியமாக ரூ.7 ஆயிரம் வழங்குவது போல் தமிழக விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி தமிழ்செல்வன், அரசின் குறைகளை எடுத்து சொல்லும் குறிப்பிட்ட விவசாயிகளை பேச அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை என கூறியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது வாயில் சங்கிலியால் பூட்டுப்போட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. 

Next Story