அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அமல் கர்நாடகத்தில் மின்கட்டணம் ‘திடீர்’ உயர்வு


அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அமல் கர்நாடகத்தில் மின்கட்டணம் ‘திடீர்’ உயர்வு
x
தினத்தந்தி 1 Oct 2018 10:00 PM GMT (Updated: 1 Oct 2018 7:42 PM GMT)

கர்நாடகத்தில் மின்கட்டணத்தை திடீரென்று உயர்த்தி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் மின்கட்டணம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, பெஸ்காம், மெஸ்காம், சி.இ.எஸ்.சி., கெஸ்காம், செஸ்காம் ஆகிய மின்வாரியங்கள் மின்கட்டணங்களை வசூலித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அந்த கட்டணமும் மின்வாரியங்கள் மூலமாக மின்கட்டணத்துடன் சேர்த்து பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நிலக்கரிக்கான செலவு அதிகரித்துள்ளதால் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பெஸ்காம், மெஸ்காம் உள்ளிட்ட 5 மின்வாரியங்களும், கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடிதம் எழுதின. அதன்படி எரிபொருள் விலை சீரமைப்பு கட்டணம் அந்தந்த மின் வாரியங்களுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கர்நாடகத்தில் மின் கட்டணமும் திடீரென்று அதிகரித்துள்ளது.

அதாவது, புதிய கட்டண உயர்வானது ஒரு யூனிட் மின்சாரத்துக்கு பெஸ்காம் மின்வாரியம் சார்பில் 14 பைசாவும், மெஸ்காம் மின்வாரியம் சார்பில் 4 பைசாவும், சி.இ.எஸ்.சி. மின்வாரியம் சார்பில் 5 பைசாவும், கெஸ்காம் சார்பில் 8 பைசாவும், செஸ்காம் சார்பில் 5 பைசாவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு மட்டும் பொருந்தும்.

இதுகுறித்து பெஸ்காம் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘நிலக்கரி விலையை பொறுத்து எரிபொருள் விலை சீரமைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் நிலக்கரி கொண்டு வருவதற்கான செலவுகள் அதிகரிப்பின் காரணமாக தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்துக்கு பின்பு இந்த மின்கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கலாம். அல்லது இல்லாமல் கூட போகலாம்’ என்றார்.

Next Story