ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 1 Oct 2018 9:45 PM GMT (Updated: 1 Oct 2018 10:53 PM GMT)

கருவேப்பிலங்குறிச்சி அருகே ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பெண்ணிடம் ரூ.35 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், 


கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தொழுர் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக சரஸ்வதி கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார்.

அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால் ஏ.டி.எம். மையத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், தான் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாக சரஸ்வதியிடம் தெரிவித்தார். இதையடுத்து சரஸ்வதி அந்த நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து அதன் ரகசிய எண்ணை கூறினார்.

பின்னர் அந்த மர்மநபர் கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்தி விட்டு, உங்கள் கணக்கில் பணம் இல்லை என சரஸ்வதியிடம் தெரிவித்தார். தொடர்ந்து சரஸ்வதி அந்த நபரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று அங்கிருந்த அதிகாரியிடம், தன்னுடைய கணக்கில் உள்ள இருப்பு குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.

அதற்கு வங்கி அதிகாரி, உங்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் வேறொரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 எடுத்திருப்பதாக கூறினார். அப்போது தான் அவருக்கு ஏ.டி.எம். மையத்தில் நின்ற மர்மநபர், கார்டை மாற்றிக்கொடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்து 400-ஐ அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story