புதுச்சேரிக்கு 4 மாதத்தில் விடிவு வரும் - நாராயணசாமி நம்பிக்கை


புதுச்சேரிக்கு 4 மாதத்தில் விடிவு வரும் - நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2018 12:07 AM GMT (Updated: 2 Oct 2018 12:07 AM GMT)

முட்டுக்கட்டைகளை சமாளித்து ஆட்சி நடத்துவதாகவும், புதுவை மாநிலத்துக்கு இன்னும் 4 மாதத்தில் விடிவு வரும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை முதியோர் பராமரிப்பு சங்கம் (பாண்கேர்) சார்பில் சர்வதேச முதியோர் தினம் ஆந்திர மகா சபாவில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். பாண்கேர் செயலாளர் பத்மநாபன் வரவேற்று பேசினார்.

விழாவில் சர்வதேச முதியோர் தினத்தையொட்டி நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இலவச சிறப்பு கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட 30 பேருக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டது.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை மாநிலத்துக்கு கலால்துறை மூலம் ஓரளவு வருமானம் வருகிறது. மற்ற வகைகளில் வருமானம் குறைவு. அந்த வருவாயைக்கொண்டு பல்வேறு துறைகளுக்கும் செலவிட்டு வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனையும் இப்போது திருப்பி செலுத்தி வருகிறோம். நமது வரவு ரூ.7 ஆயிரத்து 830 கோடியாகவும், செலவினம் ரூ.9 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.

இதில் இருந்துதான் இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, மீனவர்கள் உதவித்திட்டங்கள் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். டெல்லியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகையை மத்திய அரசுதான் வழங்குகிறது. ஆனால் புதுவை அரசுக்கு தருவதில்லை.

அதேபோல் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக ரூ.600 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்தியில் ஒத்த கருத்துள்ள ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரியை வளர்ச்சிக்கு கொண்டு வர முடியும். மாற்று ஆட்சி இருப்பதால் புதுச்சேரியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கிறார்கள். நாம் எதைக்கேட்டாலும் பரிசீலனை செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் எதையும் தருவதில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுவைக்கு நிறைய நிதி கொடுத்தார்கள். இப்போது நம்மை 15–வது நிதிக்குழுவிலோ, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவிலோ சேர்க்கவில்லை. முன்பு நமக்கு 90 சதவீத நிதியை மானியமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால் தனிக்கணக்கு தொடங்கியபின் அந்த மானியம் 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது அதுவும் 26 சதவீதமாக குறைந்துவிட்டது.

15–வது நிதிக்குழுவில் நமது மாநிலத்துக்கு பிற மாநிலங்களுக்கு கிடைப்பதுபோல் 42 சதவீத நிதி கிடைக்கும். அதன்படி ரூ.3 ஆயிரத்து 700 கோடி கிடைக்கவேண்டும். ஆனால் இப்போது ரூ.1,650 கோடிதான் கிடைக்கிறது. கல்வி, மருத்துவத்தில் நாம் முதல் இடத்தில் உள்ளோம்.

திட்டங்களை செயல்படுத்த மத்தியில் மட்டுமல்லாது மாநிலத்திலும் முட்டுக்கட்டை உள்ளது. இதையெல்லாம் சமாளித்து ஆட்சி நடத்துகிறோம். இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் இதற்கு விடிவு வரும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:–

அரசுப்பணியில் இருக்கும்போது பலருக்கு நோய்கள் வருவதில்லை. அதேநேரத்தில் அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டால் என்னென்னவோ நோய்கள் வருகின்றன. அதற்காகத்தான் இப்போது ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 18 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றோர் இருக்கும் நிலையிலும் இந்த திட்டத்தில் 5 ஆயிரம் பேர்தான் இணைந்துள்ளனர்.

அதன் முக்கியத்துவம் தெரியாமல் பலர் சேராமல் உள்ளனர். இப்போது மற்றவர்களும் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். இதை முதல்–அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார். மற்றவர்களுக்கும் காப்பீடு திட்டம் வந்துள்ளது. இதற்கான பிரீமியத்தில் 75 சதவீத தொகையை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.


Next Story