மாவட்டத்தில் வியாழக்கிழமைதோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கை


மாவட்டத்தில் வியாழக்கிழமைதோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2018 10:51 PM GMT (Updated: 2 Oct 2018 10:51 PM GMT)

மாவட்டத்தில் நாளை முதல் வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கடலூர், 

கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியில் உள்ள வீடுகளில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உள்ளதா? என்பது குறித்து கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வீட்டை சுற்றி பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடு, உடைந்த பானை, டயர், ஆட்டுக்கல் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி, மண்பாண்டங்களை பிளச்சிங் பவுடர் மூலம் கழுவி சுத்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் அந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற வேண்டுமென்றும், கழிவுநீர் கால்வாய்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க பிளச்சிங் பவுடர் தூவ வேண்டுமென்றும், கொசு மருந்து அடிக்க வேண்டுமென்றும் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) ராமசாமிக்கு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் உள்ளதா? என வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரு மண்டல அலுவலர்களை நியமனம் செய்துள்ளோம். இவர்கள் வீடுகள் தோறும் கள ஆய்வு மேற்கொள்வார்கள். டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களிடையே தேவையான அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

சுத்தமான குடிநீரில் தான் டெங்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வைத்திருக்கும் பாத்திரங்களை திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும். எந்த பகுதியிலாவது 3 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அப்பகுதியில் சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நமது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை. கடந்த ஆண்டை போல் வியாழக்கிழமைதோறும், இந்த ஆண்டும் நாளை (வியாழக்கிழமை) முதல் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.

ஆய்வின்போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராமசாமி, கடலூர் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story