டீக்கடைக்காரர் கொலையில் வியாபாரி உள்பட 5 பேர் கைது


டீக்கடைக்காரர் கொலையில் வியாபாரி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 7:16 PM GMT)

திண்டுக்கல்லில், டீக்கடைக்காரரை வெட்டிக்கொன்ற வழக்கில் வியாபாரி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 47). இவர் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகே டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு வழக்கம் போல கடையை திறந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருடைய கடை அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.

அதில் இருந்து முகமூடி அணிந்திருந்த ஒரு கும்பல் திபு, திபுவென இறங்கி வீராச்சாமியின் கடையை நோக்கி ஓடி வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து டீக்கடைக்குள் புகுந்த அந்த கும்பல் வீராச்சாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வீராச்சாமி பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையாளிகள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, கொலையாளிகள் வந்த ஆட்டோ மூலம் துப்பு துலக்கினர். போலீஸ் விசாரணையில், திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரியான நாகராஜ் (37) என்பவர், தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து வீராச்சாமியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவருடைய உறவினர்களான செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (38), வேடப்பட்டியை சேர்ந்த சகாயராஜ் (34), விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (26), கவுதம் (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான நாகராஜ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வீராச்சாமியும், நாகராஜும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகளை ஏலம் எடுத்துள்ளனர். காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி, அதனை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பும் வேலையை நாகராஜ் செய்து வருகிறார். அவர், வீராச்சாமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் வீராச்சாமி கடனை திருப்பி கேட்டபோது, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீராச்சாமி, நாகராஜின் கடைக்கு சென்று தகராறு செய்து கடைக்கு பூட்டு போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய உறவினர்களிடம் தெரிவிக்கவே, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி வீராச்சாமியை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

Next Story