அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 9:42 PM GMT)

சிதம்பரம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம், 


சிதம்பரம் அருகே உள்ளது சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி. இந்த கல்லூரியில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களின் வசதிக்காக கல்லூரியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதுதவிர கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை என தெரிகிறது.

மேலும் மாணவர்கள் அந்த கல்லூரிக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் சிதம்பரம் பகுதி மாணவர்கள் கிள்ளை வழியாக செல்லும் பஸ்சில் ஏறி மண்டபம் மெயின்ரோட்டில் இறங்கி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து கல்லூரிக்கு வரும் நிலை உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து சி.முட்லூர் புறவழிச்சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், கல்லூரியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். கல்லூரிக்கு சென்று வர வசதியாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், அவர்களது கோரிக்கைகளை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்ற மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சி.முட்லூர் புறவழிச்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story