இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்


இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
x
தினத்தந்தி 5 Oct 2018 3:59 AM IST (Updated: 5 Oct 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

“திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றி அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்“ என்று மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை, 


மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று காலை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.

பின்னர் கூட்ட அரங்கிற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியின் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சீனிவேலு ஆகியோர் படங்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டத்துக்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் மதுரை மாவட்டம் முக்கியமானது. அதிலும் அ.தி.மு.க.விற்கு மதுரை மாவட்டம் ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின் முதன்முதலாக போட்டியிட்டது மதுரை மாவட்டத்தில்தான். அதன் காரணமாகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் 32 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். அதன்பிறகு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 43 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

அவரது மறைவுக்குப் பின் இப்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சாதனைகளையும், அவரது வழியில் இப்போது நடைபெறும் ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டிற்காக மத்திய அரசு 16 விருதுகளை வழங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றிதான் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். எனவே தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்காக பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ராஜேந்திரபாலாஜி, பாஸ்கரன், மணிகண்டன் உள்பட 15 அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பேரவை நிர்வாகிகள் தமிழரசன், வெற்றிவேல், ஜபார், இளைஞரணி நிர்வாகிகள் கிரம்மர் சுரேஷ், வக்கீல் ரமேஷ், சோலைராஜா, ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story