அரியலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


அரியலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2018 3:30 AM IST (Updated: 6 Oct 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே குடி நீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்,

அரியலூரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் குடிநீர் முறையாக வருவதில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாலம்பாடி கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் அரியலூர் திம்ழூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி செல்லும் நேரத்தில் சாலை மறியல் நடந்ததால் பெரும்பாலான பள்ளி பஸ்களும் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் பாதிப்பு அடைந்தன. இக்கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்காக எற்கனவே கடந்த ஒருமாதத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story