புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் கலெக்டர் ஆய்வு


புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2018 3:15 AM IST (Updated: 6 Oct 2018 8:04 PM IST)
t-max-icont-min-icon

புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம்,

புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

முறப்பநாடு

தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா வருகிற 12–ந் தேதி தொடங்கி, 23–ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

முறப்பநாடு கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம்

பின்னர் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறையை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்தில் இருந்து படித்துறை வரையிலும் சிமெண்டு தள கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. படித்துறை அருகில் தற்காலிக கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் அருகில் உள்ள திருமஞ்சன படித்துறை ஆழமாக உள்ளதால், அங்கு பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு பக்தர்கள் யாரும் செல்லாத வகையில், தடுப்பு கம்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது.

ஆழ்வார்திருநகரி

தொடர்ந்து ஆழ்வார்திருநகரி சங்கனி மண்டப படித்துறை, முக்காணி பெருமாள் கோவில் படித்துறை, பிள்ளையார் கோவில் படித்துறை ஆகியவற்றையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ் (ஸ்ரீவைகுண்டம்), தீபு (திருச்செந்தூர்), தாசில்தார்கள் சந்திரன், தில்லைப்பாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், துணை தாசில்தார் சுந்தர ராகவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story