தொடர் மழை எதிரொலி: சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது


தொடர் மழை எதிரொலி: சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 7 Oct 2018 10:45 PM GMT (Updated: 7 Oct 2018 10:27 PM GMT)

தொடர் மழை காரணமாக, கடைமடை பகுதியில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டத்தில் காவிரியின் கடைமடை பகுதியாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதி அமைந்து இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், இந்த பகுதியில் விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே எடையார் கிராமத்தில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிழணையில் இருந்து வரும் வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட நீரை பயன்படுத்தி, சம்பா நெல் நடவு பணியை எடையார் கிராம விவசாயிகள் மேற்கொண்டனர். நடவு செய்து 2 வாரங்களே ஆகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. டெல்டா பகுதியில் நெல் நடவு செய்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் எடையார் கிராம பகுதி விவசாயிகள், தங்கள் நிலங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாமல் உள்ளனர். இதற்கு காரணம் இங்கு, வெள்ள நீர் வழிந்தோட பயன்படும் வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருப் பதை ஆகும்.

இதனால் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. நடவு செய்து 2 வாரங்களே ஆனநிலையில் பயிர் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்து இருக்கிறார்கள். நேற்று இந்த பகுதியில் மழை ஓய்ந்து வெயில் அடித்த போதிலும், வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தினால் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால், விரைவில் பயிர் அழுகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த காலத்தில் வறட்சி மற்றும் அதை தொடர்ந்து வந்த வெள்ளத்தால் கடைமடை பகுதி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். தற்போது அதே போன்று ஒரு நிலை, மீண்டும் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி, மழைநீர் வடிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எடையார் பகுதி விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடையார் கிராம விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story