சாணார்பட்டி அருகே கல்லறைகள் இடிப்பு: சிலுவைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள்


சாணார்பட்டி அருகே கல்லறைகள் இடிப்பு: சிலுவைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 9 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். சாணார்பட்டி அருகே உள்ள வேலாம்பட்டி ஊர்பொதுமக்கள் கையில் சிலுவைகளுடன் வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் ஊருக்கு வடபுறம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களின் கல்லறை அமைக்கப்பட்டு சிலுவை ஊன்றப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுதோறும் இறைவழிபாடு நடத்தி வருகிறோம். அதன் அருகே உள்ள வீட்டுமனைகளை விற்பதற்காக கொசவபட்டியை சேர்ந்த ஒருவர் எங்களது முன்னோர்களின் கல்லறைகளை இடித்து சிலுவைகளை அகற்றி உள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதே இடத்தில் மீண்டும் சிலுவைகளை ஊன்ற அனுமதி அளிக்க வேண்டும். மேலும், அங்கு வழிபாடு நடத்த பாதுகாப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.


Next Story