தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்; கலெக்டரிடம் முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி மக்கள் கோரிக்கை


தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்;  கலெக்டரிடம் முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2018 3:30 AM IST (Updated: 9 Oct 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேசுவரி அம்மன் ஆலய வரிதாரர்கள் பலர் வந்தனர். அவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஜெ.ஜெ.நகரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் சுமார் 180 வரிதாரர்கள் உள்ளனர். அவர்கள் சார்பில் இந்த மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எங்கள் பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி, குழந்தைகளுக்கு கல்வி உதவி, ஆலய திருப்பணி போன்ற பல சேவைகளை செய்து வருகின்றது. தற்போது இந்த ஆலை சில பொய் பிரசாரங்களாலும், வதந்திகளாலும் அரசாங்கத்தால் மூடப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி வாழ் மக்கள் பலர் வாழ்வாதாரத்தையும் சமுதாய நலத்திட்டங்களையும் இழந்து உள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த ஆலையை மாவட்ட நிர்வாகம் திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதே போல், முத்துகிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்று நல்ல வருமானம் பெற்று வந்தோம். தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை எங்களுக்கு எந்த நோயும் இல்லை. தயவு கூர்ந்து நிலையை ஆராய்ந்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story