பாபநாசம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் கடத்தல்: வனத்துறை ஊழியர் உள்பட 6 பேர் மீண்டும் கைது


பாபநாசம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் கடத்தல்: வனத்துறை ஊழியர் உள்பட 6 பேர் மீண்டும் கைது
x
தினத்தந்தி 8 Oct 2018 9:30 PM GMT (Updated: 8 Oct 2018 7:12 PM GMT)

பாபநாசம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தியதாக வனத்துறை ஊழியர் உள்பட 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமசிங்கபுரம், 

களக்காடு முண்டந்துறை வனச்சரக பகுதியான சேர்வலாற்றில் கடந்த ஆகஸ்டு மாதம் தேக்கு மரம் வெட்டி கடத்தப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி, சேர்வலாற்றை சேர்ந்த வனவேட்டை தடுப்பு காவலர் முருகன், காரையார் காணிக்குடியிருப்பை சேர்ந்த ரஞ்சித், விக்கிரமசிங்கபுரம் வடமலைசமுத்திரத்தை சேர்ந்த தங்கசாமி, பிரபாகரன், அகஸ்தியர்புரத்தை சேர்ந்த சாலமன்ராஜ், நவநீதன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தேக்கு மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்கள் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் 6 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த நிலையில் பாபநாசம் வனச்சரகம் பகுதி தைலாத்து ஓடை அருகே தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், வனவேட்டை தடுப்பு காவலராக இருந்த முருகன் உள்பட 6 பேரும் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் வனத்துறையினர் மீண்டும் கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் வேறு பகுதியில் அவர்கள் தேக்கு மரங்களை வெட்டி கடத்தினரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். தேக்கு மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவத்தில் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story