கடலூர், சிதம்பரம் உள்பட 4 நகராட்சிகளில் நில அளவை ஆவணங்கள் கணினி மயம் கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
கடலூர், சிதம்பரம் உள்பட 4 நகராட்சிகளில் நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி எல்லைகளில் உள்ள நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் இணைய தளம் மூலம் பட்டா மாறுதல் பணி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக இந்த மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் கிராமப்புற நிலங்கள் கணினி மயமாக்கப்பட்டு, பட்டா மாறுதல் பணியானது வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை பணியாளர்கள் மூலம் தமிழ்நிலம் மென்பொருள் இணைய தளத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது நகராட்சி எல்லைக்குட்பட்ட நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய 4 நகராட்சிகள் முதல் சோதனை ஓட்டத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்கள் ஆகியவை மூலம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளம் வழியாக அளிக்கலாம்.
மனுதாரர்கள் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்கள், மூல ஆவணங்கள், வில்லங்க சான்று மற்றும் தொடர்பு ஆவணங்கள் ஆகியவற்றை இந்த மையங்களில் அளிக்க வேண்டும். அவை ஸ்கேன் செய்யப்பட்டு மீண்டும் மனுதாரர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படும்.
மேலும் மனுவை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் சீட்டும் வழங்கப்படும். மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் மனுதாரருக்கு கைபேசி குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும். பட்டா மாறுதல் ஆணையினை பொது சேவை மையங்களில் மனுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டாவில் கியூஆர் கோடு உள்ளதால் தாசில்தார் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம் பொதுமக்கள் தாலுகா அலுவலகம் சென்று மனு அளிப்பது தவிர்க்கப்பட்டு, தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சேவை மையங்களில் மனுக்கள் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story